Monday, December 3, 2018

இந்த பேலியோ உணவுமுறையை எடுப்பதற்கு முன்பு ஏன் ரத்தப் பரிசோதனை கட்டாயம் செய்யச் சொல்கிறீர்கள்?



ஏனென்றால், உங்களுக்கு உடலில் என்ன பிரச்சனைகள் இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது, இந்த உணவுமுறையால்  உங்களுக்கு கிடைத்த நன்மைகளை நீங்கள் தெளிவாக அறிந்துகொள்ள இந்த பரிசோதனைகள் உதவும்.

இந்த உணவுமுறையை எடுத்து ஒரு மாதம் கழித்து அல்லது ஒரு வாரம் கழித்து டெஸ்ட் எடுத்தால் என்ன தவறு?

பேலியோ உணவுமுறை எடுத்தபிறகு நீங்கள் டெஸ்ட் எடுக்கிறீர்கள். சரி, அதற்கு முன்பாக எப்பொழுது டெஸ்ட் எடுத்திருப்பீர்கள்? தெரியாது. சரி, உங்கள் உடலில் என்ன பிரச்சனைகள் இருக்கிறது? நான் நல்லாத்தான் சார் இருக்கேன், என்ன வெயிட் கொஞ்சம் அதிகம், அவ்ளோதான், அதுக்கு ஏன் டெஸ்ட்? இப்படித்தான் உங்கள் எண்ணங்கள் இருக்கும். ஆனால் இந்த டெஸ்ட் எடுத்து ஒரு மாதம் கழித்து உங்கள் ரிசல்ட்டில் உங்களுக்கு டயபடிக் இருக்கிறது, தைராய்ட் இருக்கிறது, விட்டமின் டி குறைவு, ஹீமோக்ளோபின் குறைவு, இரும்பு சத்துகுறைவு, பி12 குறைவு, HscRP அதிகம், க்ரியேட்டினின் அதிகம், HbA1C அதிகம் என்று வந்தால் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும், உங்கள் நலம் விரும்பும் நண்பர்களும் என்ன சொல்வார்கள்?



ஏன்யா நான்தான் அப்பவே சொன்னேன்ல, இந்தக் கொழுப்பு சாப்பிட்டா இந்தமாதிரி எல்லாம் பிரச்சனை வரும்னு? பேஸ்புக்ல சொன்னாங்களாம்னு முட்டையும், சிக்கனும், வெண்ணெயும், நெய்யுமா அடிச்சி வீக்கின? புட்டுக்கிச்சா? சோறு தின்னக்கூடாதுன்னு சொன்னப்பவே நீ உசாராகிருக்கவேணாமா? சோறு இல்லாம மனுசன் உயிர் வாழமுடியுமா? சிறுதானியம், தேன், நாட்டு சர்க்கரை, ஜாங்கிரி, பட்டர் பிஸ்கெட், க்ரீம் பன் கூட சாப்பிடக்கூடாதுன்னு சொன்னப்பவே உனக்குத் தெரியவேணாமா? மேகிய விடவா சத்தான சாப்பாடு கிடைக்கும்?

என்று இன்னும் பல கெட்டவார்த்தைகள் போட்டு, நீங்கள் கொஞ்சம் என்னைப் போல அப்பாவியாக இருந்தால் மூக்கில் கொஞ்சம் குத்துகூட கிடைக்கும்.

சரி,

அதுவே நீங்கள் உணவுமுறைக்கு  முன்பாக டெஸ்ட் எடுக்கிறீர்கள். உங்களுக்கு டயபடிக் இருக்கிறது, உடல் பருமன், விட்டமின் டி குறைபாடு, தைராய்டு உள்ள வர்ட்டா என்று கேட்கிறது, சைவர்களாக இருந்தால் பி12 குறைவு, அடிக்கடி சோர்ந்து தூங்குபவராக இருந்தால் ஹீமோக்ளோபின் குறைவு, இருதயப் பிரச்சனைகளை ஓரளவு அறிவிக்கும் HsCRP அளவுகள் அதிகமாக இருக்கிறது.

இந்த ரிசல்ட்டைக் குழுவில்போட்டு பேலியோ  உணவுமுறை கேட்கிறீர்கள். இதேபோன்ற பிரச்சனைகளுடன் வந்து அவைகள் சரியான மெம்பர்களின் போஸ்ட்களைப் படிக்கிறீர்கள். இதுபோன்ற பிரச்சனைகள் ஏன் நீங்கள் தினம் நல்லது என்று சாப்பிட்ட உணவுகள் மூலமாக வருகிறது என்று புரிந்துகொள்கிறீர்கள். பலவிதமான குழப்பங்களுக்கு பதில் கிடைக்கிறது.

ஒழுங்காக சர்ப் போட்டு கழுவிய தூய்மையான அறிவில் பேலியோ உணவுமுறையை  ஏற்றிக்கொண்டு, பரிந்துரைக்கப்படும் உணவுமுறையை சரியாகக் கடைப்பிடிக்கிறீர்கள். ஒரு மாதம்/ 3 மாதம் கழித்து நீங்கள் மீண்டும் டெஸ்ட் எடுத்து உங்கள் பேலியோ உணவுமுறைக்கு முன்பான ரிசல்ட்டுடன் ஒப்பிடுகிறீர்கள். பல விசயங்களில் முன்னேற்றம் இருக்கிறது. இந்த உணவுமுறையை இப்பொழுது உங்கள் குடும்பத்தினரும், நண்பர்களும் நம்புகிறார்கள், உங்கள் மருத்துவரும் ஆச்சரியத்துடன் எப்படி? என்று கேட்கிறார்.

இதுதான் மிக முக்கியமான வித்தியாசம். இதற்காகத்தான் இந்த உணவுமுறைக்கு  முன்பாக டெஸ்ட்கள் அவசியம்.

இவ்வளவு சொல்லியும் டெஸ்ட் எடுக்காமல் சில அதிபுத்திசாலிகள்  பேலியோ உணவுமுறை பிறகு டெஸ்ட் எடுத்து எனக்கு அது கூடிவிட்டது என்று அது கொழுப்பு சாப்பிட்டதால்தான் என்று எங்கள் நாட்டு வைத்தியர் சூடம் அடித்துச் சொல்கிறார், சீனியர்களே நீங்கள் உடனே உங்கள் சொந்த வேலையெல்லாம் தூக்கிக் கடாசிவிட்டு எனக்கு ஒரு நல்ல வழி கூறுங்கள் என்று கேட்பார்கள். அவர்களுக்கு நம்மிடமிருந்து கிடைக்கும் பதில் ஆழ்ந்த பரிதாபம் மட்டுமே. தனது உடல் ஆரோக்கியத்திற்கு அக்கறை காட்டாத எவருக்கும் ஆரோக்கியம் கிடைப்பது கடினம்தான், உங்களுக்காகத்தான் லேகியம், தாயத்து, டானிக், பவுடர் எல்லாம் விற்கிறார்கள், அதில் என்ன இருக்கிறது என்று கூடக் கவலைப்படாமல் அதை உண்டு மகிழ்ச்சியுடன் இருக்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment